பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்தநாள் விழா ; ஜெயலலிதா, கருணாநிதி மரியாதை

karuna_jaya_196213_2794362f

பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அண்ணாவின் உருவச்சிலைக்கும், உருவப்படத்திற்கும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அடுக்கு மொழி வசனங்கள் மூலம், மக்களை தன்பால் ஈர்த்த அறிஞர் அண்ணா 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில்தான் பிறந்தார். காஞ்சிபுரத்தில் நடராஜன் – பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முதலில் நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடக் கழகத்திலும் இணைந்த அண்ணாதுரை, கருத்து வேறுபாடு காரணமாக கழகத்திலிருந்து பிரிந்து 1949ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.

அண்ணாவின் ஆட்சி

1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற முதலமைச்சராக பொறுப்பேற்றார் அண்ணா. சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இவரின் காலத்திலேயே நடந்தது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் , புற்றுநோய் பாதிப்பு ஏற்பட, 1969ம் ஆண்டு உயிரிழந்தார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் தமிழகத்திற்கு அவர் செய்த நன்மைகள் ஏராளம். மக்களின் மனதில் இன்றைக்கும் அவர் மறையாமல் இருக்கிறார்.

கருணாநிதி மரியாதை

அண்ணாவின் 108வது பிறந்தநாளை ஒட்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மரியாதை செலுத்தினார். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு பொருளாளர் ஸ்டாலின், பொது செயலாளர் அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்பி ஆகியோர் மரியாதையை செலுத்தினர்.

ஜெயலலிதா மரியாதை

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறந்த நாள் விழா சிறப்பு மலரையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>