வடபழனியில் தீ விபத்து; 4 பேர் உயிரிழப்பு

fire

சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேருக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய தெற்கு பெருமாள் வீதியில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீனாட்சி(60), செல்வி(30), சஞ்சய் (4), சந்தியா(10) ஆகிய 4 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். தெற்கு சிவன் கோயில் தெரு குடியிருப்பில்  அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மூச்சு திணறல் ஏற்பட்ட  5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.54 மணிக்கு கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட தீ இருசக்கர வாகனங்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் புகைமூட்டம் காரணமாக தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக 20 இருசக்கர வாகனங்கள் எரிந்ததால் தான் இவ்வளவு பெரிய விபத்தாக மாறியது. இதனையடுத்து புகை மூட்டம் அடுக்குமாடி முழுவதும் பரவியது. இந்த புகை மூட்டத்தால் அனைவரும் மயக்கமடைந்திருக்கிறார்கள். தீயணைப்பு துறையினர் முழுவதுமாக தீயை அணைத்து விட்டு, அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கதில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனில்லமல் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்றும் ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.

வடபழனி குடியிருப்பில் தீ விபத்து ஏற்ப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குடியிருப்பு உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2004ல் கட்டப்பட்ட குடியிருப்பு எந்த அனுமதியும் பெறவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்புக்கு எங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் உரிய அங்கீகாரம் இல்லாததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்றும் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ காயம் ஏற்பட்டவர்களுக்கும், புகையால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்படும் என்பதால் யாரையும் அனுமதிக்கவில்லை என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>