வெந்நீரால் நோய் தீர்க்கும் தேவிகாபுரம் ஸ்ரீ கனககிரீஸ்வரர்

789

திருவண்ணாமலை மாவட்டம் போளுரை அடுத்துள்ள (தேவகி வழிபட்ட) தேவிகாபுரத்தில் விஜயநகர கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்ட கலை நயம் மிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சிவன் கோவில் உள்ளது. இங்கு சிவ பெருமான் பொன்மலை நாதர் கனகிரிஸ்வரர் என்ற பெயரிலும் அம்பாள் பெரிய நாயகி பிரஹன்ன நாயகி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

மலைமீதுள்ள கனகிரிஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் வெந்நீரை தீர்த்தமாக உட்கொண்டால் ரத்த சம்பந்தமான நோய்களும் தீராத நோய்களும் தீரும் என்பதும் மணதுயரம் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இங்கு அம்பாள் குழந்தை வரம் கல்யாண வரம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இந்த அம்மனை குழந்தை இல்லாத தம்பதிகள் மனமுருக வேண்டிக்கொண்டு விளக்கேற்றி கோவிலை சுற்று வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

7897

பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால் தயிர் இளநீர் எண்ணெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். இங்கு தல விருட்சம் வில்வ மரமும் தீர்த்தம் சிவ தீர்த்தமும் உள்ளது.

787

கனககிரி நாதரை வணங்கி தவமிருந்த அன்னை:

ஒரு சமயம் அன்னையும் அப்பனும் கயிலை மால்வரையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிரிங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கி சென்றார். அதனை கண்டு வருத்தமடைந்த அன்னை இறைவனை நோக்கி வணங்கி ஐயனே தங்கள் உடலில் சரிபாதியை எனக்கு தரவேண்டும் என்று வேண்டினாள். சிவனும் சக்தியை நோக்கி பெண்ணே நீ பூவுலகம் சென்று காஞ்சியபதியில் (காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஸித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருனை (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடபாகம் தருவேன் என்று உறுதி அளித்தார். அன்னையும் காஞ்சிபுரம் வந்து ஏகாபரநாதரை மணந்தார். பின்னர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கி தவமிருந்தார். அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது.

இரண்டு லிங்கங்கள்:

இங்கு சுயம்பு மூர்த்தியாக சிவன் அருள்பாலிக்கிறார். ஒரே கருவறையில் எங்குமில்லாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளது. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
நாராயணவனம் தேவிகாபுரம் ஆனது எப்படி?
‘தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தை
தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாடு’ என்று சேக்கிழாரும்
“தெண்ணீர் வயல் தொண்டை நாடு சான்றோருடைத்து” என்று ஒளவையாரும் இந்நாட்டினை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். இத்தகுப் பெருமை வாய்ந்த தொண்டை நாட்டில் அதன் கோட்டங்களில் ஒன்றான பல்குன்ற கோட்டத்தில் மேல்குன்ற நாட்டி; இராசகம்பீரன் மலையை அடுத்த முருகமங்கலம் பற்றில் தேவிகாபுரம் என்ற ஊர் உள்ளது.

மலைகளுள் பொன்மலை என்பது மிகவும் சிறப்புடையது. இதனை வடமொழியில் கனகாசலம், கனககிரி என்று கூறுவர். “காவாய் கனகத்திரளே போற்றி” என்று மாணிக்கவாசகர் அருள செய்துள்ளார். மேருமலைக்கும் கனகாசலம் என்ற பெயர் உண்டு. இதற்கு கனகாசலம் கனகத்திரள் என்ற பெயர்கள் உண்டு. சிவனின் அருள் பெற தேவகி வழி பட்டதால் தேவிகாபுரம் என்று அழைக்கப்பட்டது.

இறைவன் எழுந்தருளிய இடங்கள் நறுமணம் கமழும் சோலைகளாக இருந்தன. எனவே சோலைகள் சுழ்ந்த கோயில்கள் சோலையின் பெயராலேயே வழங்கப்பட்டன. கா என்பதற்கு சோலை என்பது பொருள். திருக்கோலக்கா திருவானைக்கா திருக்கோடிக்கா திருநெல்லிக்கா எனும் திருத்தலங்களின் பெயர்கள் கா என்று முடிவதை கண்டு தெளியலாம். அதுபோல் தேவன் (இறைவன் உறையும்) கோயில் தேவக்கா என வழங்கி அதனுடன் புரம் என்ற சொல் சேர்த்து தேவக்காபுரம் என்று வழங்கப்பெற்றது என்றும் கருத இடம் உண்டு. பின்னர் இது மறுவி தேவிகாபுரமானது.

கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழர் மண்டலத்து பல்குன்ற கோட்டது மேல்குன்ற நாட்டு ராசகம்பீர மலையை அடுத்த முருகமங்கலம் பற்றைச் சார்ந்த தேவக்காபுரம் என்று உள்ளது. இது மருவி இப்போது தேவிகாபுரம் என்று அழைக்கப்படுகிறது.

கனககிரி மலையில் சுயம்பு மூர்த்தியாக:

500 அடி உயரமும் 5 கி.மீ. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி என்றும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவரை கனககிரீஸ்வரர் என்றும் பொன்மலை நாதர் என்றும் அழைக்கின்றனர்.

வெந்நீர் அபிஷேகம்:

வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்கு மலை உச்சியில் இரும்பு கம்பியால் ஆன கருவியை கொண்டு தோண்டியபோது குபீரென ரத்தம் கொப்பளித்ததாம். அதை மேலும் தோண்டியபோது அழகிய சிவலிங்க திருமேனி வெளிவந்தது. அன்று முதல் பக்தர்கள் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக வெந்நீரில் அபிஷேகம் செய்தனர். அது இன்றும் மலைமேல் உள்ள சிவபெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுயம்பு லிங்கம் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியாத அளவில் இருப்பதால் அருகிலேயே காசி விஸ்வநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜைகன் நடந்து வருகின்றன.

திருமணத்தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம்:

காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிபெரும் ஆலயத்தில் எழுந்தருளியிருப்பதுபோல இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்தில் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரிந்து வருகிறாள். இந்த அன்னையின் திருநாமம் பெரிய நாச்சியார் என்றும் பெரிய நாயகி என்றும் அழைக்கப்படுகிறது. தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள பெரிய நாயகி கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து சிவபெருமானிடம் சேர்ந்ததால் திருமணத்தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தவத்தை மெச்சி பங்குனி உத்தரத்தின்போது சாமி மலையிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்துகொண்டு போகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பு.

இரட்டை லிங்கம்:

ஒரு முறை இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன் இங்குள்ள சிவனின் பெருமை பற்றி கேள்விப்பட்டான். போரில் வென்றால் சிவனுக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டான். வெற்றியும் பெற்றான். சிலர் கஷ்டகாலத்தில் கடவுளுக்கு நேர்ந்துகொள்வார்கள். காரியம் முடிந்ததும் மறந்து விடுவார்கள். மன்னனும் வெற்றிக்களிப்பில் இப்படி மறந்தான். மீண்டும் ஒரு கஷ்டம் வரவே சிவனுக்கு கோயில் கட்டினான். ஆனால் வேடன் கண்டெடுத்த சுயம்பு லிங்கம் காணாமல் போய்விட்டது. வருத்தமடைந்த மன்னன் காசியிலிருந்து வேறு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் மறைந்த சுயம்பு லிங்கம் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்துவிடுகிறார் என்பதற்கு உதாரணமே இந்த நிகழ்சி. அவருக்கு மன்னன் கனககிரீஸ்வர் என்று பெயரிட்டு அதே கருவரையில் பிரதிஷ்டை செய்தான். இப்படியாக ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள்.

உள் மண்டபத்தில் தூணில் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக 9 பெண்களின் சிலையை யானை நிற்பதுபோல் வடிவமைத்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கும் வழி தேவி தவம் செய்ததாக கருதப்படும் இடத்தில் அன்னையின் பாதம் உள்ளது. மலை அடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மொத்தமே 9 கல்களால் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் அம்மன் இல்லாததால் பிரதோஷம் இங்கு நடத்தப்படுகிறது.

தொடர்புக்கு:

அருள்மிகு பெரியநாயகி உடனுறை பொன்மலை நாதர் திருக்கோவில் விழாக்குழுத் தலைவர் சிவத்திரு. சா.சோ.மீனாட்சி சுந்தரம் அவர்கள். தேவிகாபுரம், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். செல்:9442470477

அமைவிடம்:

திருவண்ணாமலையிலிருந்து 48 கி.மீ. தூரத்திலும் வேலூரிலிருந்து 60 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 160 கி.மீ. தூரத்திலும் தேவிகாபுரம் உள்ளது.

படமும் செய்தியும்:

திருவண்ணாமலை. ப.பரசுராமன்

About the Author

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>